திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் பாதுகாப்புக்கு மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம்: தேனியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தேனி :  திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களின் பாதுகாப்பிற்காக தனி நீதிமன்றங்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும் என தேனி  அருகே அரண்மனை புதூரில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி அருகே அரண்மனை புதூரில், நேற்று தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.  மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.  கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தினோம். இதனால் அந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை திமுக பெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரின் அக்கிரமம், அராஜகத்தையும் தாண்டி 70 சதவீத இடங்களில்  திமுக  வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம் மக்கள்தான்.

இது போடி சட்டமன்ற தொகுதி. ‘இந்த தொகுதியின் எம்எல்ஏ யார் தெரியுமா’ என்ற கேள்வி கேட்க, பொதுமக்கள் ‘ஓபிஎஸ்’ என்றனர். ‘இவரைப் பார்த்து இருக்கீங்களா’ என்று கேட்டபோது, ‘எப்பவாவது வருவார்’ என்று குரல் எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது ஓ.பன்னீர்செல்வம் எப்படி எல்லாம் நடித்தார்? இப்போது எப்படி இருக்கிறார். சிலருக்கு  அரசியலில்  அதிர்ஷ்டம் வரும். அந்த அதிர்ஷ்டம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மூன்று முறை வந்தது. 2001ம் ஆண்டு ஊழல் வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்தபோது முதல் முறை, 2014ம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது இரண்டாம் முறை, 2016ம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது மூன்றாம் முறையாக முதல்வரானார். 3 முறை முதல்வராக இருந்தவர் மக்களுக்கு ஏதாவது செய்து இருக்கிறாரா? முதல்வர் பதவி போனதும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றார்.

துணை முதல்வர் ஆனதும் சொல்லவில்லை. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் என்னை பார்த்து சிரித்தார் என்பதற்காக, சசிகலாவால் பதவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. நீதி விசாரணை அமைக்க வேண்டும் என்று சொன்னவர் பன்னீர்செல்வம்.  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையிலான விசாரணை கமிஷன் 8 முறை அழைத்தும் ஒருமுறைகூட விசாரணைக்கு பன்னீர்செல்வம் செல்லாமல், ஜெயலலிதா படத்தை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார்.  4 மாதத்தில் திமுக ஆட்சி ஆட்சிக்கு வந்ததும் சாவுக்கு யார் யார் காரணம் என்பதை விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.பெண்களின் பாதுகாப்பிற்காக திமுக  ஆட்சிக்கு வந்ததும் மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைத்து தவறு  செய்பவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும். கடந்த 2  ஆண்டுகளில் 12 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர்.  இதனை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் மாலை மதுரை செக்கானூரணியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

பலமடங்கு உயர்ந்த விலைவாசி

மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின்போது இருந்த விலைவாசி தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது . திமுக ஆட்சியின்போது ரூ.250க்கு விநியோகம் செய்யப்பட்ட காஸ் சிலிண்டர் தற்போது ரூ.800 ஆகி விட்டது. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.38ல் இருந்து தற்போது ரூ.92 ஆக உயர்ந்துள்ளது. உளுந்தம்பருப்பு ரூ.60ல் இருந்து ரூ.140, பாமாயில் லிட்டர் ரூ.48ல் இருந்து ரூ.118, சர்க்கரை ரூ.18ல் இருந்து ரூ.40, கடலைப்பருப்பு ரூ.30ல் இருந்து ரூ.72 ஆகவும் உயர்ந்து இருக்கிறது . பெட்ரோல் விலை உயர்வை கேட்கவே தேவையில்லை.  பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் திமுக ஆட்சியின்போது அதனை கட்டுப்படுத்தி வைத்திருந்தோம்’’ என்றார்.

Related Stories: