பாவூர்சத்திரம், கடையம், செங்கோட்டை ரயில் நிலையங்களில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று செல்லுமா?.. பயணிகள் எதிர்பார்ப்பு

தென்காசி: நெல்லையில் இருந்து தென்காசிக்கு கடந்த 9 மாதங்களாக ரயில்கள் எதுவும் இயக்கப்படாத நிலையில் தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் போதுமான போக்குவரத்து வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. நெல்லை தென்காசி வழித்தடத்தில் எந்தவித ரயிலும் இயக்கப்படாத நிலையில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் கடந்த  4ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு பாலக்காடு சென்றடைகிறது.

பொதுவாக எக்ஸ்பிரஸ் ரயில்கள்  சென்று சேரும் இடங்களுக்கு  காலை ஒன்பது மணிக்குள்  சென்று சேரும் வகையில்  பெரும்பாலும் இயக்கப்படுவது வழக்கம். ஆனால்  பாலருவி எக்ஸ்பிரஸ்  ரயிலை பொருத்தவரை கேரள மாநிலம் செங்கனூரிலிருந்து திருவல்லா, கோட்டயம், கருப்பன் தரா, வைக்கம் ரோடு, எர்ணாகுளம், ஆலுவா பகுதிகளை சேர்ந்தவர்கள் காலை வேளையில் அலுவலக பணிகளுக்கு செல்லும் வகைக்காக மட்டும் இயக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் பயணிகள் மத்தியில் உள்ளது. நெல்லையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு நள்ளிரவு 12.33 மணிக்கு வருகிறது.

இந்த நேரத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதை காரணம் காட்டி பாவூர்சத்திரம் மற்றும் செங்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்ல நிறுத்தங்கள் மறுக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக இரவு 8.30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டால் கூட  நெல்லையிலிருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு பயணம் செய்ய இயலும், ஆனால் நள்ளிரவு நேரத்தில் புறப்படும் இந்த ரயிலில் உள்ளூர் பயணிகள் யாரும் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.

அதேபோன்று தென்காசி, செங்கோட்டை, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கேரளாவில் இருந்து அனேகமானோர் வருகை தருகின்றனர். தற்போது கேரளாவிற்கு பயணிகள் ரயில் எதுவும் இயக்கப்படாத நிலையில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இவ்வாறு செல்வதற்காக வருகை தரும் பயணிகள் தென்காசி பஜார் கடைகள் இரவு 10 மணியுடன் அடைக்கப்பட்டு விடும் நிலையில் நள்ளிரவு வரை ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இரவு 11.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.30 மணிக்கு புறப்படும் பட்சத்தில் 10 மணிக்கு தென்காசிக்கு வந்துவிடலாம்.

அவ்வாறு வரும் பட்சத்தில் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக வருகின்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லையிலிருந்து பாலக்காடு செல்லும் வழித்தடத்தில் பாவூர்சத்திரத்தில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் செங்கோட்டையிலும் நின்று செல்வது இல்லை. மறுமார்க்கத்தில் பாலக்காட்டில் இருந்து நெல்லை வரும்பொழுதும் செங்கோட்டையில் நிறுத்தம் இல்லை. அதேசமயம் பாவூர்சத்திரத்தில் நிறுத்தம் அறிவித்துள்ளனர். கீழக்கடையத்தில் நிறுத்தம் இல்லை.

பாவூர்சத்திரம், கீழக்கடையம், செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களிலும் இரண்டு வழித்தடங்களிலும் நின்று செல்ல தேவையான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தனுஷ்குமார் எம்.பி., மற்றும் பயணிகள் நல ஆர்வலர் பாண்டியராஜன் மற்றும் தென்காசி செங்கோட்டை பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலத்தில் புனலூர் மற்றும் கொட்டாரக்கரா ஆகிய ரயில் நிலையங்களில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டு ஒரே நாளில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே நெல்லையிலிருந்து பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தை இரவு 8.30 மணி  என்று மாற்றுவதுடன், கீழக்கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை ரயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: