காயல்பட்டினத்தில் இரண்டரை வயது குழந்தையின் நினைவாற்றல் இந்தியா புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் விருது

ஆறுமுகநேரி: காயல்பட்டினத்தில் இரண்டரை வயது குழந்தையின் நினைவாற்றல் திறமையை பாராட்டி இந்தியா புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு விருது வழங்கியுள்ளது. காயல்பட்டினம் ஓடக்கரையைச் சேர்ந்தவர் பாசிம்மீரா சாஹிப். இவரது மனைவி பாத்திமுத்து முசோரா. இவர்களுக்கு இரண்டரை வயதில் யாஹ்யா புவாத் என்ற மகன் உள்ளான். பாசிம் மீரா சாஹிப்  துபாயில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இக்குழந்தை தனது நினைவாற்றலால் விலங்குகள், பறவைகள், தேசிய சின்னங்கள், பிரபல கார் நிறுவனங்களின் சின்னங்கள் ஆகியவற்றின் பெயர்களை படம் பார்த்து சரியாக கூறுகிறான்.

மேலும் தமிழ், ஆங்கிலம், அரேபிய மொழிகளின் மாறிய எழுத்து வரிசைகளை சரியாய் அமைத்தல், தமிழ், ஆங்கிலம் குழந்தைப் பாடல்கள் போன்ற பெயர்களையும் அது குறித்த தகவல்களையும் கூறி அனைவரையும் அசத்தி வருகிறான்.

யாஹ்யாவின் திறமையைக் கண்டு இந்தியா புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு பாராட்டி விருது ஒன்றை வழங்கி அவனது திறமைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுகுறித்து யாஹ்யா தாய் பாத்திமுத்து முசோரா கூறுகையில், ஒரு வயதிலேயே புத்தகங்களிலுள்ள படங்களைப் பார்த்தும் அருகில் உள்ளோர் சொல்வதை அப்படியே திருப்பி சொல்லியும் வருவதை கவனித்து அவனுக்கு சொல்லிக் கொடுத்தேன்.

அதை விரும்பி அவனும் திரும்ப சொல்லி பழகினான். இன்னும் பல தகவல்களை சொல்லி கொடுத்து கலாம் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸிலும் பெயர் பெற வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன். வருங்காலத்தில் ஐஏஎஸ் ஆகி சமுதாயத்திற்கு தொண்டாற்றிட வேண்டும் என்பது என் ஆசை என்றார். இரண்டரை வயது குழந்தையின் நினைவுத்திறனை கண்டு அப்பகுதி மக்கள் வாழ்த்தியும், பாராட்டியும் வருகின்றனர்.

Related Stories:

>