திமிங்கலம் பாடும் பாட்டு! கேட்டு தலையை ஆட்டு!!

பூமியின் மிகப் பெரிய விலங்கு என்றால் அது நீலத் திமிங்கலம்தான். நீலத் திமிங்கலங்கள் பற்றிய ஆய்வு இன்றும் தொடரும் புதிர்களில் ஒன்று. இதில் சமீபத்தில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. நீலத் திமிங்கலங்களின் புதிய குடும்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம். இவை பரிமாறிக் கொள்ளும் ஒலிகளின் அடிப்படையில் இவை கண்டறியப்பட்டுள்ளன. நீலத்திமிங்கலங்கள் பாடல்கள் மூலமாகவே கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளும் இயல்புடையவை. இந்தப் பாடல்களின் அதிர்வெண் மிகக்குறைவாகவும், ஒலி அளவு அதீதமாகவும் இருக்கும். ஒரு நீலத் திமிங்கலத்தின் பாடல் சராசரியாக 188 டெசிபல்கள் இருக்கும். 180 டெசிபல் என்பது ஒரு ஏவுகணை விண்ணில் செலுத்தப்படும்போது வரும் அசுர ஒலி. அப்படியானால் இந்தப் பாடல்கள் எவ்வளவு ஓசையாய் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

திமிங்கலங்களின் இந்தப் பாடல்கள் 35 நிமிடங்கள் தொடங்கி 25 மணிநேரம் வரைகூட நீடிக்குமாம். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு திமிங்கலக் குடும்பத்துக்கும் ஒவ்வொரு பாடல் உண்டு. ஒரு குடும்பத்தின் பாடலைப் போல இன்னொரு குடும்பத்தின் பாடலும் ஒலிக்குறிப்புகளும் இருக்காது. சுமார் ஐநூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒலிக்கும் இப்பாடல்கள் அதிக டெசிபல்களில் இருப்பதால் சாதாரண மனிதக் காதுகளுக்கு முழுமையாக ஒலிக்காது.நீலத்திமிங்கலங்களின் பாடல்களைத் தொடர்ந்து பதிவு செய்து கவனிப்பதன் மூலம், ஒரு கடற்பகுதியில் எத்தனை திமிங்கிலக் குடும்பங்கள் வசிக்கின்றன. எத்தனை திமிங்கலங்கள் வலசை செய்கின்றன என்பதைக் கண்டறிய முடியும். 2017ம் ஆண்டு மடகாஸ்கரை ஒட்டிய கடற்கரைப்பகுதிகளில், நீலத்திமிங்கலங்களின் புதிய வகை பாடல் ஒன்று ஆவணப்படுத்தப்பட்டது. ஆனால் அந்தக் குழு எங்கெல்லாம் பயணிக்கிறது என்பதும், அது புது குழுதானா என்பதும் தெரியாமலேயே இருந்தது.

பிறகு, சில வருடங்கள் கழித்து ஓமான் கரையோரத்தில், அரபிக் கடலிலும் புதிய வகை பாடல் ஒன்று கண்டறியப்பட்டது. ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்ட இலங்கை நீலத்திமிங்கலங்களின் குழுவினரே இந்தப் பாடலை இசைத்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். ஆனால், அந்தப் பாடலோடு இது பொருந்திப்போகவில்லை. உடனே, சர்வதேச திமிங்கல ஆராய்ச்சியாளர்களிடம் இந்தப் பாடல் குறிப்புகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஒலிக்குறிப்புகள், ஒலிகளுக்கு இடையிலான இடைவெளி, அதிர்வெண் எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து, மடகாஸ்கரில் காணப்பட்ட நீலத் திமிங்கிலங்களின் பாடலும் இதுவும் ஒன்றுதான் என்பதை ஆராய்ச்சியாளர்கள் தற்போது உறுதி செய்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, ’மேற்கு இந்தியப் பெருங்கடலிலும் அரபிக் கடலிலும் ஒரு புதியவகை நீலத் திமிங்கிலக் குடும்பம் கண்டறியப்பட்டது” என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி பலவகைகளில் முக்கியமானது. ஏற்கெனவே நீலத்திமிங்கலங்கள் அழிந்துவரும் நிலையில், இதுபோன்ற புதிய குழுக்கள் கண்டறியப்படுவது நம்பிக்கையளிக்கிறது. மேலும், நாம் அறியாத வலசைப் பாதைகள், நீர்வழித்தடங்கள் கடலுக்குள் இருக்கலாம். அதற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது.இப்போதைக்கு இது ஒரு தனிக் குழு என்பது மட்டுமே உறுதியாகியிருக்கிறது. மரபணு சோதனை உள்ளிட்ட வேறு ஆய்வு களும் நடத்தப்பட்டால், இந்த இந்தியப் பெருங்கடல் குழு, ஒரு தனி சிற்றினமாகவே (Sub species) இருப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு என்கிறார்கள் இந்த ஆய்வை செய்த விஞ்ஞானிகள். கடலின் மிகப்பெரிய உயிரினமான நீலத் திமிங்கலங்கள் பற்றியே நாம் இன்னும் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளவில்லை. இன்னும் நாம் புரிந்துகொள்ளாத ஆச்சரியங்கள் நிறைந்ததாகவே கடல் இருக்கிறது.

Related Stories: