சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா தீவிர அரசியலில் குதிக்க முடிவு

சென்னை: வரும் 27ம்தேதி சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா, தீவிர அரசியலில் குதிக்க முடிவெடுத்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தனது ஆதரவாளர்கள் பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். சசிகலாவின் வருகை அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லை என்று முதல்வர் அறிவித்து முற்றுப்புள்ளி வைத்தாலும், சசிகலா வருகைக்கு பின் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா,  சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்கள். அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டார்கள்.

சசிகலா மட்டும் வரும் 27ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட உள்ளதாக கர்நாடக சிறை  துறை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது. இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 27ம்தேதி காலை 10 மணிக்கு சசிகலா வெளியில் வருகிறார்.  அவருக்கு தமிழக எல்லையான ஓசூரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அவரது  ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஓசூர் மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் சசிகலா தங்குவதற்கான வீடு ஏற்பாடாகியுள்ளது. ஆனால் அவர் எந்த வீட்டில் தங்க உள்ளார் என்பது குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. சிறையில் இருந்து வெளியில் வரும் சசிகலா தீவிர அரசியலில் குதிக்க முடிவெடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக சிறையில் இருக்கும் போதே, தனது ஆதரவாளர்கள் குறித்த பட்டியலை தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் வெளியில் வந்த உடன் ஆதரவாளர்களை நேரில் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் சசிகலா போட்டியிட முடியாது. தண்டனை அனுபவித்து வந்திருப்பதால், சட்டப்படி இன்னும் 4 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனாலும், டிடிவி.தினகரன் மூலம் பாஜ கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே, தீவிர அரசியலில் குதிக்க சசிகலா முடிவெடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக தான் ஆதரவாளர்கள் பட்டியலை தயாரித்து அவர்களை அழைத்து சசிகலா பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பது, அதிமுக தன்னை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டதாக பாஜ தலைமையிடம் கூறியுள்ளதால், அவர்களுக்கு என்ன மாதிரியான பதிலடி கொடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆதரவாளர்களுடன் சசிகலா விவாதிப்பார் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்தே, இந்த சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் பங்கு எப்படி இருக்கும் என்பது தெரிய வரும். அவரது அரசியல் அதிமுகவுக்கு என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: