தமிழகத்தில் கோவில் சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.. எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன?.. ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் காணமால் போன சிலைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுடைய வரலாற்றின் தொன்மை மற்றும் அசையா சொத்துக்களை பதிவேடுகளாக பராமரிக்க வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த விதிகளின் படி பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை, அவை காணாமல் போனதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் அந்த ஆவணங்கள் கண்டறிவதற்கும், காணாமல் போன சிலைகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும், சிபிசிஐடி மற்றும் தொல்லியல் ஆய்வு துறை அடங்கிய கூட்டு புலன் விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என வெங்கட்ராமன் என்பவர் சென்னை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடத்தப்படும் சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் உடந்தையுடன் சிலைகள் குறித்த விவரங்கள் மறைக்கப்படுவதாகவும், இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள் எந்தெந்த கோவில்களில் உள்ள சிலைகள் மாயமாகியுள்ளது? என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவின்னர். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறை சார்பில் 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: