வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதின் விளைவு!: 17 கோப்புகளில் கையெப்பம் இட்டார் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி..!!

புதுச்சேரி: வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதின் விளைவாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உடனடியாக 17 கோப்புகளில் கையெப்பம் இட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில வளர்ச்சி திட்டங்களை முடக்கியும், அமைச்சர்கள் அனுப்பும் நூற்றுக்கு மேற்பட்ட கோப்புகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்தும் வருவதாக குற்றம்சாட்டினார். கடந்த 10 நாட்களாக தானும், அமைச்சர்களும் போராட்டம் நடத்தியத்தின் விளைவாக தற்போது 17 கோப்புகளில் கிரண்பேடி கையெழுத்து இட்டதாக நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார். கிரண்பேடி தன்னை திருத்திக் கொள்ளாமல் ஆணவப்போக்கோடும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவப்படையினரால் பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுனருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து சர்வாதிகார போக்குடன் செயல்படும் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி 22ம் தேதி குடியரசு தலைவரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: