×

தட்கலில் காஸ் சிலிண்டர் பெற கூடுதலாக ரூ25 கட்டணம் வசூல்

சேலம்: மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், நாடு முழுவதும் 28 கோடி எல்பிஜி காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த வாடிக்கையாளர்களுக்கு முறையாக சிலிண்டர் சப்ளையை மேற்கொள்ள சமீபத்தில் ஓடிபி எண் முறையை அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், புதிய திட்டமாக ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும் வகையில் தட்கல் புக்கிங் முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தட்கல் புக்கிங் சிலிண்டர் விநியோகம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

முதலில், குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் தட்கல் புக்கிங் முறையை இந்தியன் ஆயில் நிறுவனம் அமல்படுத்துகிறது. அதன் வெற்றியை பார்த்து, நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். தட்கல் முறையில் காஸ் சிலிண்டர் புக்கிங் செய்த 30 முதல் 40 நிமிடத்திற்குள் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு சிலிண்டர் சப்ளையை செய்திட வேண்டும். இந்த விரைவு விநியோகத்திற்காக சேவை கட்டணமாக ரூ25 கூடுதலாக வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தட்கல் சிலிண்டர் புக்கிங் முறை ஒன்றும் புதிதல்ல.

ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு, குறிப்பிட்ட நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் சிலிண்டரை பெற, சிறப்பு புக்கிங்கை மேற்கொண்டு ரூ20 முதல் ரூ50 வரை அதிக கட்டணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்டனர். தற்போது அமலுக்கு வரும் தட்கல் புக்கிங் திட்டம், ஒரு சிலிண்டர் இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்,’’ என்றனர்.

Tags : An additional charge of Rs 25 is levied to get a gas cylinder in Tatkal
× RELATED தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது