திமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஜெ.மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவார்கள்: தேனியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தேனி: திமுக ஆட்சியில் அமர்ந்ததும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவார்கள். இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என தேனியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம், நடந்து வருகிறது. தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரண்மனைப்புதூரில் இன்று காலை மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்த கூட்டத்தில் பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அதிமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதே பிரச்னையாக உள்ளது என்றும் பெண்கள், மு.க.ஸ்டாலினிடம் குமுறல்களை வெளிப்படுத்தினர். மக்களின் குறைகளை கேட்ட பின்னர் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவி வரும் காலத்தில் அதிமுக செயலிழந்து காணப்படுகிறது. ‘திமுக ஒன்றிணைவோம்’ என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு உணவு, உடை, மருந்துகள் கொடுத்து அவர்களை அரவணைத்தது. மக்கள் சேவை செய்வதே திமுகவின் கொள்கை. இந்த தொகுதி எம்எல்ஏவான ‘பவுஸ் பன்னீர்செல்வம்’ பெரும் அதிர்ஷ்டத்தால் மூன்று முறை முதல்வரானார்.

பதவிக்கு வந்த பின்னர் அவரது நடவடிக்கைகள் எப்படி இருந்தது என உலகம் அறியும். மக்களை மட்டுமல்ல, ஜெயலலிதாவையும் அவர் மறந்து விட்டார். சட்டசபையில் என்னை பார்த்து சிரித்ததால், பன்னீர்செல்வத்தின் பதவியை சசிகலா பறித்தார். பதவி இழந்ததும் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிடம் தியானம் செய்து நாடகமாடினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி நீதி விசாரணை வேண்டும் எனக் ேகட்டார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக திமுகவினர் புகார் அளிக்கவில்லை. அதிமுகவினரும், ஓபிஎஸ்சும் தான் கேட்டனர். உச்ச நீதிமன்றத்தால் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

ஜெயலலிதா இறந்து விட்டார்.  சிறைக்கு செல்லும் முன் சசிகலா யாரை முதல்வராக்கலாம் என யோசித்தார். அப்போது சசிகலாவை நோக்கி ஒன்று ஊர்ந்து வந்தது, அவரை தட்டிக் கொடுத்து, முதல்வராக அமர்த்தினார். அவரை இனிமேல் இபிஎஸ் அல்லது பழனிசாமி என மட்டும் குறிப்பிடுங்கள். எடப்பாடி என அடைமொழியிட்டு அந்த ஊர் மற்றும் மக்களை அசிங்கப்படுத்த வேண்டாம். அதிமுக ஆட்சி மோசமான நிலையில் உள்ளது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் பழனிசாமியின் நிலை என்னவாக போகிறது என்பது தெரியவில்லை. இன்னும் 4 மாதத்தில் அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். மக்கள் ஆதரவுடன் நாம்தான் ஆட்சியில் அமர போகிறோம்.

திமுக ஆட்சியில் அமர்ந்ததும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வீதியில் நிறுத்தப்படுவார்கள். இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டம் 150 நாள் வேலை திட்டமாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: