×

தீர்வு எட்டப்படுமா?: டெல்லியில் விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

டெல்லி: விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் விஞ்ஞான் பவனில் தொடங்கியுள்ளது. குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்ட டிராக்டர் பேரணிக்கு கோர்ட் தடை விதிக்க மறுத்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 57வது நாளாக டெல்லி எல்லையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ஆனால், 9 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. வேளாண் சட்டம் குறித்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் விவசாயிகளுடன் 10-ம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற ஆலோசனையை மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாய சங்க தலைவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். வேளாண் சட்டங்களில் தேவையான திருத்தங்களை செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கப்பட்ட போதிலும், 3 சட்டங்களையும் நீக்கியே ஆக வேண்டும் என விவசாய சங்கங்கள் பிடிவாதமாக இருப்பதால் இழுபறி நீடித்து வருகிறது. 9முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வியை தழுவிய நிலையில் 10ம் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.


Tags : phase ,talks ,unions ,Delhi ,government , Delhi, Agricultural Associations, Central Government, Negotiations
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...