டிராக்டர், பேரணிக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசு, டெல்லி போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி:வரும் குடியரசு தினத்தன்று விவசாய அமைப்புகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசார் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளது. வேளாண் சட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யாவிட்டால் குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் நுழைந்து டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாய அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசும் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி திட்டத்திற்கு எதிராக மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளனர். அவ்வாறு அவர்கள் இடையூறு செய்யும் பட்சத்தில் அது நாட்டின் ஜனநாயக உரிமைக்கு எதிராக அமைந்து விடும். அது மிகப்பெரிய தர்மசங்கடத்தை நாட்டுக்கு ஏற்படுத்தும். அதனால் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை விசாரிக்க முடியாது. அதில் முகாந்திரம் இல்லை. ஏனெனில் இது முழுவதுமாக சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சனை என்பதால் அதனை போலீசார் தான் செய்ய வேண்டும். அதற்கான அதிகாரத்தை அரசு தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் ஒரு போராட்டத்தை நடத்த அல்லது தடுத்து நிறுத்த முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகளே நீதிமன்றத்தை நாடுவதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசார் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற நீதிமன்றம் அறிவுறுத்தி அனுமதி வழங்குகிறது. மேலும் இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி காவல்துறை தான் முழு பொறுப்பு ஏற்று செய்ய வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் வேளாண் சட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவை மாற்றி அமைக்கக் கோரி தொடரப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: