தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரம்: டீ மாஸ்டர் கண்களை பாட்டிலால் சரமாரியாக குத்தி சேதப்படுத்திய நண்பர்

சென்னை: தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரமடைந்து போதை ஆசாமி தனது நண்பரான டீ மாஸ்டரின் 2 கண்களையும் மது பாட்டிலால் குத்தி நோண்டி எடுத்து சேதப்படுத்தினார். தப்பி ஓடும் போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் நீலிதநல்லூர் பலபத்திர ராமபுரத்தை சேர்ந்தவர் அசோக சக்கரவர்த்தி (29). டீ மாஸ்டர். திருவான்மியூரில் உள்ள டீ கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர், அதே ஊரை சேர்ந்த பெரியபாண்டியன் (26). இவர், தேனாம்பேட்டையில் உள்ள டீ கடை ஒன்றில் மாஸ்டராக வேலை செய்கிறார்.

இருவரும் அடிக்கடி மெரினா கடற்கரையில் சந்தித்து ஒன்றாக மது அருந்துவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் மது அருந்தும் போது, பெரியபாண்டியனின் அம்மா குறித்து அசோக சக்கரவர்த்தி தவறாக பேசியதோடு, ‘சேலையை பிடித்து இழுப்பேன்’ என்று கூறியுள்ளார். வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில், பெரியபாண்டியனை அசோகசக்கரவர்த்தி அடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தாய் குறித்து தவறாக பேசிய நண்பனை கொலை செய்யும் நோக்கில் மது அருந்த அசோக சக்கரவர்த்தியை மெரினா கடற்கரைக்கு நேற்றிரவு பெரியபாண்டியன் அழைத்து வந்துள்ளார். ராணி மேரி கல்லூரி எதிரே உள்ள கடற்கரையில் அமர்ந்து இருவரும் மது அருந்தினர். போதை தலைகேறியது. அப்போது, ‘தாய் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் கொலை செய்து விடுவேன்’ என்று பெரியபாண்டியன் மிரட்டியுள்ளார். மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெரியபாண்டியன், மது பாட்டிலை உடைத்து திட்டமிட்டப்படி அசோக சக்கரவர்த்தியின் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.  

அப்போதும் ஆத்திரம் தீராததால், கீழே தள்ளி மார்பில் அமர்ந்து, அசோக சக்கரவர்த்தியின் 2 கண்களையும் பாட்டிலால் குத்தி சேதப்படுத்தியுள்ளார். அருகில் கிடந்த பிளாஸ்டிக் குச்சியால் 2 கண்களையும் துடிக்க துடிக்க நோண்டி எடுத்துள்ளார். அசோக சக்கரவர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். பெரியபாண்டியன் தப்பி  ஓட முயன்றார். அவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக உதைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மெரினா போலீசார் வந்தனர். அவர்களிடம் பெரியபாண்டியனை ஒப்படைத்தனர். இரு கண்களும் வெளியே தொங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அசோக சக்கரவர்த்தியை, போலீசார் மீட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், போதையில் இருந்த பெரியபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் மெரினாவில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>