சென்னை மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் திட்டத்திற்கு எதிர்ப்பு!: காமராஜர் சாலையில் பதாதைகள் ஏந்தி வியாபாரிகள் போராட்டம்..!!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் குடும்பத்துடன் காமராஜர் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது. சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் கடைகள் திட்டம் செயல்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே மெரினா கடற்கரையில் வணிகம் செய்து வரும் வியாபாரிகளுக்கு 60 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 540 கடைகளும், புதிதாக கடை அமைக்க விரும்புவோர்களுக்கு 360 கடைகளும் என மொத்தம் 900 கடைகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட் கடைகளை அமைப்பதற்காக சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில், இன்று குலுக்கல் முறை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஏற்கனவே மெரினாவில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரியும், 500க்கும் மேற்பட்டோர் பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை உயரதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: