திருத்தங்கல் இணைக்கப்பட்டதால் பெரு நகராட்சியாக தரம் உயர்ந்தது சிவகாசி-அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என மக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் 9 கிராம ஊராட்சிகளை இணைத்து, சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என கடந்த 2017, அக்.23ல் சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி மற்றும் சிவகாசி ஒன்றிய பகுதியில் உள்ள தேவர்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், ஆணையூர், சித்துராஜபுரம், விஸ்வந்ததம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம் கிராம ஊராட்சிகளை சிவகாசியுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்தனர். இதற்கு கிராம ஊராட்சிகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மாநகராட்சி அறிவிப்பை கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில், 3 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவகாசியை பெரு நகராட்சியாக தரம் உயர்த்தும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் முதற்கட்டமாக திருத்தங்கல் நகராட்சியை சிவகாசி நகராட்சியுடன் இணைக்கும் பணிக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதி வழங்கினார். இதன்படி சிவகாசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளையும், திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளையும் இணைத்து சிவகாசி நகராட்சியை பெரு நகராட்சியாக தரம் உயர்த்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் பரிந்துரை செய்தார்.

திருத்தங்கல் நகராட்சி 13 ச.கி.மீ பரப்பளவு கொண்டது; 60 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டு வருவாய் 12 கோடி. சிவகாசி 6.89 ச.கி.மீ பரப்பளவு கொண்டது; 78 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். ஆண்டு வருவாய் 28 கோடி. இரண்டு நகராட்சிகளையும் இணைப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.40 கோடி வருவாய் கிடைக்கும்.

சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகளை இணைக்க இரண்டு நகராட்சி ஆணையர்களும் கடந்த 2020 டிச.10ல் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருக்கு கருத்துரு அனுப்பியிருந்தனர். இதன்படி தற்போது சிவகாசி நகராட்சியுடன், திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு பெரு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிவகாசி பெரு நகராட்சிக்கான வார்டு எல்லைகள் வரையறுக்க தனி அதிகாரி நியமிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இத குறித்த அரசின் உத்தரவு கலெக்டர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், சிவகாசி நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பட்டுள்ளது. சிவகாசி பெரு நகராட்சியாக தரம் உயர்ததப்பட்டுள்ளதால் அகலமான சாலை, குடிநீர், வாறுகால் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories:

>