ஒரத்தநாடு பொன்னாப்பூரில் நெல் ஈரப்பதம் உலர்த்தும் நவீன இயந்திரம்-கலெக்டர் ஆய்வு

ஒரத்தநாடு : ஒரத்தநாட்டை அடுத்த பொன்னாப்பூரில் நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் நவீன இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.டெல்டா பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரதப்பதம் அதிகளவில் இருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையில், நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதில் பல்வேறு சிக்கல் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு முன்னோடி விவசாயிகள் ஒன்றிணைந்து, நெல் உலர்த்தும் நவீன இயந்திரத்தை, ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் வடிவமைத்து, சோதனை முயற்சிக்காக தஞ்சை மாவட்டம் பொன்னப்பூர் கிழக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

தொடர்ந்து நேற்று காலை நெல் உலர்த்தும் நவீன இயந்திரம் சோதித்து பார்க்கப்பட்டது.

இதனை கலெக்டர் கோவிந்தராவ், வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிற்றரசு மற்றும் முன்னோடி விவசாயிகளான பிஆர்.பாண்டியன், கணபதி அக்ரஹாரம் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் வழக்கமாக 27 மி.மீ., அளவு மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 295 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன், கடந்த 4 நாட்களாக ஆய்வு செய்துள்ளார்.

அந்த வகையில் விவசாயிகளுக்கு எந்த வகையில் தமிழக அரசு சார்பில் உதவி செய்ய முடியும் என அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்துக்கு முதலாவதாக நெல் ஈரப்பதத்தை குறைத்திடும் வகையில் நெல் உலர்த்தும் நவீன இயந்திரம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த இயந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள இதற்காக முன்னோடி விவசாயிகள் பல பேர் நல்ல ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இந்த இயந்திரத்தின் கொள்ளளவு 2 மெட்ரிக் டன் அளவு உடையது. இந்த இயந்திரத்தில், இரண்டு மணி நேரத்தில் 24 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை, 18 சதவீத அளவுக்கு அதன் ஈரப்பதமாக குறைக்க வர வாய்ப்புள்ளது. இந்த சோதனை ஓட்டம் முழுமையாக வெற்றியடைந்தால், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விவசாயிகள் முழுமையாக பயன்படும் வகையில், படிப்படியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: