மழையால் பயிர்கள் நாசமானதால் மீன்பிடித்து விற்பனை செய்யும் விவசாயிகள்

கமுதி : கமுதி அருகே பேரையூர் கிராமத்தில் பத்தல் கட்டை மூலம் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்து வந்த தொடர் மழை காரணமாக கண்மாய் மற்றும் ஊரணிகள் நிரம்பி வழிந்தது. ஊரணி மற்றும் குளங்களில் மீன்களை பிடிக்க, மீன்பிடி வலைகள், கூச்சா வலை உள்ளிட்டவைகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கமுதி அருகே பேரையூரில் பழங்கால முறையான துளை போடப்பட்ட கட்டையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர்.

பத்தல் கட்டையில் அயிரை, கெண்டை, கெளுத்தி, குரவை போன்ற மீன்கள் பிடிபடுகிறது. விவசாயம் தொடர் மழையால் நாசமானதால், விவசாயிகள் பத்தல் கட்டை மூலம் மீன்பிடித்து விற்பனை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். கண்மாய்க்கு செல்லும் ஓடை நீரில் தடுப்பு ஏற்படுத்தி ஓட்டைகள் உள்ள கட்டையின்  வழியாக தண்ணீர் வரும்போது, புதிதாக தண்ணீர் வருவது போல் சல,சல என சத்தம் இருப்பதால் மீன்கள் அனைத்தும் புதிய நீரை நோக்கி பாயும் போது பத்தல் கட்டையின் பின்னால் உள்ள குழிக்குள் வந்து சேருகிறது.

இதில் பிடிபடும் அயிரை மீன்கள் கிலோ ரூ.1,200 வரையும், கெளுத்தி மீன்கள் கிலோ ரூ.1000, கெண்டை ரூ.300 வரை விற்கப்படுகிறது. மழை பெய்யும் காலத்தில் மட்டும் கண்மாய்க்கு வரும் நீரை பயன்படுத்தி இந்த பத்தல் கட்டை மூலம் மீன் பிடிப்பு நடைபெறும். சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான ஊர்களில் இருந்து பலர் இந்த மீன்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். தற்போது உள்ள தொடர் மழையினால் 15 நாட்களுக்கு இந்த மீன் பிடிப்பு நடைபெறும்.

Related Stories: