தேனி மாவட்ட விவசாயிகளை வாழ வைக்காத வாழை விவசாயம்

*முதலீட்டை கூட எடுக்க முடியாமல் பரிதவிப்பு

*விளைச்சல் சரிவால், உரிய விலையின்றி தவிப்பு

*குரலற்றவர்களின் குரல்

கம்பம் : தேனி மாவட்டத்தில் வாழை விவசாயம் சரிவடைந்து வருகிறது. போதிய விளைச்சல் இல்லாததால் பராமரிப்பு செலவை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 10 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கரில், வாழை சாகுபடி நடந்து வருகிறது. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக விவசாயிகள் வாழை பயிரிட்டு வருகின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பயிரிடப்படும் ‘பச்சை வாழைப்பழம்’ என்றழைக்கப்படும் ஜி9 ரக வாழைப்பழங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கே.கே.பட்டி, ஆங்கூர்பாளையம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கூடலூர், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் என கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள் இந்த ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக ஜி9 ரக பச்சை வாழைப்பழத்துடன், நாழிப்பூவன், நேந்திரம், செவ்வாழை போன்ற ரகங்களையும் பெருமளவில் விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர். நிலத்தில் அதிகளவில் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே ஜி9 வாழை நல்ல மகசூல் தரும். ஒரு ஏக்கர் நிலத்தில் 1,100 கன்றுகள் வரை இதை பயிரிடலாம்.

ஒரு மரத்துக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை செலவாகும். ஒரு வருடம் வரை வளர்க்க வேண்டும். அதேபோல நாழிப்பூவன் வாழை கன்றுகள் ஏக்கருக்கு 1,300 வரை பயிரிடலாம். இவ்வகை வாழை மரங்களை 10 மாதம் வளர்க்க வேண்டும். வாழையை அறுவடை செய்யும் வரை வாழை மரம் ஒன்றுக்கு சுமார் ரூ.150 வரை செலவு ஆகும்.

ஏற்றுமதியிலும் இறங்குமுகம்...

 கடந்த சில மாதங்களாக திடீரென நாளுக்கு நாள் விளைச்சல் குறைந்து வருகிறது. ஜி9 ரகத்தை பொறுத்தவரை ஒரு வாழைத்தாருக்கு, அதிகபட்சமாக கிலோ ரூ.12 வரை செலவாகிறது. ஆனால் மொத்த விலைக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை மட்டுமே விலை போகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஜி9 பச்சை ரக வாழைப்பழத்திற்கும் ரூ.10 வரைதான் கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும் விவசாயிகளுக்கு நஷ்டம்தான்.

செவ்வாழையிலும் சோகம்...

 ஜி9 ரக பச்சை வாழையில் போதிய விலை இல்லாததால் மாற்றாக செவ்வாழை ரக வாழைப்பழத்தை பயிரிட துவங்கிய விவசாயிகள் அதிலும் போதிய விலை இன்றி பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 700 கன்றுகள் வரை மட்டுமே பயிரிடக்கூடிய 15 மாதங்களில் விளையக்கூடிய இந்த செவ்வாழை ரக வாழைப்பழங்களின் உற்பத்தி விலை கிலோ ரூ.35ல் இருந்து ரூ.40 வரை ஆகிறது. ஆனால் தற்போது மொத்த விலையில் ரூ.30க்கும் கீழேதான் விவசாயிகளால் விற்பனை செய்ய முடிகிறது. ஒரு கிலோ ரூ.50க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே விலை கட்டுபடியாகும்.

நேந்திரனிலும் நஷ்டம்..

இதனால் முதலீடு செய்த பணத்தைக் கூட விவசாயிகளால் திரும்பப் பெற முடியவில்லை. நேந்திரன் பயிரிட்டவர்களும் நஷ்டமடைந்துள்ளனர். இது கிலோ ரூ.10க்குள் விற்பனை ஆகிறது. நேந்திரன் வாழை மரங்கள் லேசான காற்றுக்கே தாக்கு பிடிக்க முடியாமல் சாய்ந்து விடுபவை. சமீபத்திய காற்று மழையிலானால், மரங்கள் சாய்ந்து பெரும் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே விலை குறைந்துள்ள நிலையில், இந்த இயற்கை பாதிப்பு மேலும் விலை சரிவைத் தந்துள்ளது.

இதுதவிர, பலமான காற்றையும் எதிர்த்து நிற்கும் செவ்வாழை ரகத்தை பயிரிட்டவர்களும் கூட, கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து வீசும் புயல் மழை பாதிப்பால் பலத்த சேதத்தையே சந்தித்துள்ளனர். அரசு அதிகாரிகளிடம் வாழை விவசாயிகள் பலமுறை முறையிட்டும், விவசாயிகளுக்கான எந்த நிவாரணத் தொகையும் இதுவரை கிடைக்கவில்லை. காற்றில் சாய்வதற்கு ஒன்றும் செய்ய முடியாதென அதிகாரிகள் கைவிரிக்கின்றனர்.

Related Stories: