குவிந்து கிடக்குது குவார்ட்டர் பாட்டில் மாநகராட்சி வளாகமா, மது பாரா? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை :  மதுரை மாநகராட்சி வளாகமானது ‘மறைமுக மதுபான கடையாக’ மாறி வருவது சமூக ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.

மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகள், தேவைகளுக்காக வருகை தருகின்றனர்.

மேலும் மாநகராட்சி வளாகப் பகுதிகளில் அரசு தேர்வுபணிக்காக படித்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியரும் அன்றாடம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாநகராட்சி வளாக பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மதுபான பாட்டில்கள் குவியல் குவியலாக கிடப்பது, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாநகராட்சி அலுவல வளாகப்பகுதி, இரவு நேரங்களில் திறந்தவெளி மதுபானகடை போல செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.  

 சமூக ஆர்வலர்கள் பாலகுரு, ரவி கூறும்போது, ‘‘தூய்மையை பராமரிக்கும் பணியில் உள்ள மாநகராட்சி அலுவலக வளாகப் பகுதி முழுவதும் மதுபான பாட்டில்கள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. குடிமகன்கள் பகல், இரவு நேரங்களில் மரத்தடிகளில் அமர்ந்து மது குடித்து விட்டு தூக்கி எறிந்து செல்கின்றனர். போட்டித் தேர்வுகளுக்காக படித்து வருவோருக்கும், மாநகராட்சிக்கு பல்வேறு தேவைகளுக்கு வருவோருக்கும் இச்செயல் மிகுந்த வேதனையளிக்கிறது. மேலும், இங்குள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருக்கிறது.

கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் வெளியே ஓடி, கடுமையான துர்நாற்றத்தை தருகிறது. மேலும் மாநகராட்சி கட்டிடத்தின் மேல் பகுதியிலிருந்து ஊழியர்கள் குப்பைகளை கீழே அமர்ந்திருப்பவர்கள் மீது வீசிவிட்டு சென்று விடுகின்றனர். துர்நாற்றத்துடன், கொசுத்தொல்லையும் வளாக பகுதியில் அதிகரித்துள்ளது. மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது குறித்தும், மாநகராட்சி வளாக சுகாதாரம் குறித்தும் அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், குடிமகன்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை வேண்டும்’’ என்றனர்.

Related Stories: