திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவர் : மு.க.ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல திட்டங்கள் செயல்படுத்தினாலும் ஜெயலலிதா மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவர் என்று விராலிமலையில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிடிகே வளாகத்தில் மக்கள் சபை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பேசியதாவது:

திமுக ஆட்சி காலத்தில் தான் விராலிமலை முருகன் கோயிலுக்கு தேர் இயக்கப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் தான் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. ஆனால் விராலிமலையில் உள்ள சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்து வருகிறார். ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை. விராலிமலையில் மதுரைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதியை ஏற்படுத்தவில்லை. இந்த பகுதியில் கல்லூரி ஏதும் கொண்டு வரவில்லை.

அமைச்சர் விஜயபாஸ்கரை வேறு யார் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். குட்கா புகழ் என்று அவருக்கு நான் பட்டம் கொடுத்து இருக்கிறேன். இந்த தொகுதிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார். வருமான வரித்துறை சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. இதில் பல ஆவணங்கள் சிக்கியது. சில ஆவணங்களை அவரின் ஓட்டுனர் வெளியே தூக்கி வீசினார். அதிகாரிகளிடம் சிக்கிய ஆவணத்தில் ₹89 கோடி வினியோகம் செய்யப்பட்டதாக இருந்தது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. இதனால் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

ஜெயலலிதா மறைவு எப்படி நடந்தது என்று தெரியவில்லை. எம்ஜிஆர், அண்ணா இறந்தபோது அப்போதைய சுகாதரத்துறை அமைச்சர்கள் ஹிண்டே, சாதிக்பாட்சா ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் ஜெயலலிதா மறைவின்போது சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் அவர் இதுவரை 8 முறை ஆணையம் அழைத்தும் ஆஜராகவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல திட்டகள் செயல்படுத்தினாலும் ஜெயலலிதா மறைவிற்கு முறையான விசாரனை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவர்.

இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சி முடிந்துவிடும் என்பதால் அதற்குள் சுருட்டும் பணியில் தற்போது செயல்பட்டு வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை அடைவோம், என்றார். பின்னர், அதிமுகவை என்று மு.க.ஸ்டாலின் சொல்ல, மக்கள் நிராகரிப்போம் என்று தெரிவித்தனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>