×

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து ஜன. 27ல் சசிகலா விடுதலை: வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017 பிப்ரவரியில் அடைக்கப்பட்டுள்ளனர். பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தண்டனை காலம் 2021 பிப்ரவரியில் முடிவடைகிறது.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராத தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை சசிகலா தரப்பினர் நீதிமன்றத்தில் கட்டினர். கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தொடர்பான வருமானவரி வழக்கு விசாரணையின்போது சசிகலா ஜனவரி 27ம் தேதி வெளிவர வாய்ப்புள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்தார். இந்தநிலையில், சசிகலா வரும் 27ம் தேதி சிறையிலிருந்து வெளியே வரவுள்ளது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறும்போது, ‘சசிகலா வரும் 27ம் தேதி காலை தண்டனை முடிந்து வெளிவருகிறார். இதற்கான அதிகாரபூர்வ இ-மெயில் மூலம் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து எனக்கு இன்று மாலை 7 மணிக்கு வந்தது.
அதில், காலையில் சசிகலா வெளியில் வருவார் என்று கூறப்பட்டுள்ளது. காலை என்பது 10 மணியளவில் என்று நினைக்கிறேன். இதையடுத்து சசிகலாவை 27ம் தேதி காலை சிறையிலிருந்து அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Sasikala ,Advocate Raja Senthurpandian , Sasikala, release
× RELATED தேர்தலில் அதிமுக ஆட்சியை வீழ்த்த...