வரும் 27ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: அமைச்சர்கள் அனைவரும் 22ம் தேதி தலைமை செயலகத்துக்கு வர முதல்வர் உத்தரவு: சட்டப்பேரவையை கூட்டுவது குறித்தும் முக்கிய முடிவு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார். டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, சென்னையில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு நேரில் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன், அதற்கான அழைப்பிதழையும் முதல்வர் வழங்கினார். மேலும், அதிமுக கூட்டணி மற்றும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் நிதி குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை மறுதினம் (22ம் தேதி) அனைத்து அமைச்சர்களும் சென்னை, தலைமை செயலகத்துக்கு வரும்படி முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். அப்போது வரும் 27ம் தேதி ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோன்று, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். அதனால், 2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை விரைவில் கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தி, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது குறித்தும், அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பார்வைக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட உள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நடத்தலாமா அல்லது சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கத்திலேயே நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.

Related Stories: