60 ஆண்டுகளாக புற்றுநோய் பாதித்தவர்களுக்காக பணியாற்றிய அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு: பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா நேற்று காலமானார். அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா (93) நேற்று  காலமானார்.  இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக  தனியார் மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று  அதிகாலை 3.30 மணி அளவில் காலமானார். அவரது உடல் அடையாறு புற்றுநோய் மையத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சென்னை அடையாற்றில் செயல்பட்டு வரும் சென்னை அடையாறு புற்றுநோய்  மற்றும் ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புற்றுநோய் பாதித்தவர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தலைவாராக செயல்பட்டு வந்தர் மருத்துவர் சாந்தா, ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றினார்.  

கடந்த 1927ம் ஆண்டு மயிலாப்பூரில் இவர், நோபல் பரிசு பெற்ற உலக புகழ்பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமனின் உறவினர். புகழ்பெற்ற டாக்டர் சந்திரசேகர் இவரது தாய்மாமா. சி.எஸ்.சிவசாமி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை பயின்ற இவர் 1949ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் 1955ம் ஆண்டு எம்டி படிப்பை முடித்து உடனடியாக மருத்துவர் பணியில் சேர்ந்தார். அடையாறில் 12 படுக்கைகளுடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்ட புற்றுநோய் மையம் உலக தரம் வாய்ந்த மையமாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றினார்.

மேலும், தனது குருவான டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து அடையாறு புற்று நோய் மையத்தை உலகத்தரத்தில் சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றினார். 61 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் பணியாற்றி தனது வாழ்க்கையை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக அர்பணித்த மருத்துவர் சாந்தா இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ மற்றும் மகசசே விருதுகளை பெற்றுள்ளார். இந்த விருதுகளுக்காக தனக்கு கிடைத்த பரிசு தொகையையும் அடையாறு புற்றுநோய் மையத்திற்காக செலவு செய்தார்.

புற்றுநோய் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவர், உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனை குழு, இந்திய வேளாண் ஆய்வு கழக குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய புற்றுநோய்க் கழக தலைவராகவும் செயல்பட்டு உள்ளார். தனது வாழ்நாளில் 60 ஆண்டுகளுக்கு மேல் புற்று நோய் பாதித்தவர்களின் சிகிச்சைக்காக அர்பணித்த மருத்துவர் சாந்தாவின் மரணம் மருத்துவத் துறைக்கு பேரிழப்பு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

72 குண்டுகள் முழங்க தகனம்

சென்னை அடையாறு புற்றுநோய் மைய வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த இவரது உடலுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் சார்பில் அவரது மகன் துரை வைகோ மற்றும் மருத்துவள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அடையாறு இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதன்பிறகு பெசன்டர் நகர் மின் மயானத்தில் 24 காவல்துறையினர் சேர்ந்து 72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் மருத்துவர் சந்தா உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Stories: