×

தமிழகத்தின் நலனுக்காகவோ, மக்கள் பிரச்னைக்காகவோ அல்ல, சசிகலாவிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்: மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

பள்ளிபாளையம்: சசிகலாவிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார் என்று நாமக்கல் மாவட்டம் பாதரையில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரை கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: குமாரபாளையம் தொகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் மேம்பாட்டிற்கு தொகுதி எம்எல்ஏவாகவும், மூத்த அமைச்சராகவும் இருக்கும் தங்கமணி எதுவும் செய்யவில்லை. அதி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் தற்கொலையைபோல், நெசவாளர்கள் தற்கொலையும் அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் கடந்த 2 ஆண்டில் 4 நெசவாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதுவும் மைக்ரோ பைனான்ஸ் பிரச்னையால் தற்கொலை செய்கிறார்கள்.
நூல் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் 400க்கும் அதிகமான சாயப்பட்டறைகள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் காவிரி மாசுபடுகிறது. இந்த மாசை தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தேர்தலின்போது தங்கமணி வாக்குறுதியாக கூறினார். அதுவும் ஓராண்டில் அமைக்காவிட்டால், பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். ஆனால், பொது சுத்திகரிப்பு ஆலை இன்னும் அமைக்கப்படவில்லை. அவர் ராஜினாமாவும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதில் வேலுமணி, தங்கமணிக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. சசிகலாவுக்கு துரோகம் செய்து முதல்வரான எடப்பாடி, தற்போது அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். தமிழகத்தின் நலனுக்காகவோ, மக்களின் பிரச்னைக்காகவோ அவர் டெல்லி செல்லவில்லை.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தன்னை எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சென்றுள்ளார். வருகிற 27ம் தேதி சசிகலா வெளியே வந்த பிறகு இந்த ஆட்சி இருக்குமா? இருக்காதா? என்பது தெரியாது. உங்கள்  பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்க நான் இருக்கிறேன். உங்கள் ஸ்டாலின் இருக்கிறேன். அ.தி.மு.க.வை நிராகரிப்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். மாநாடு பணிகளை பார்வையிட்ட ஸ்டாலின்: தி.மு.க.வின் 11-வது மாநில மாநாடு, திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.  மாநாட்டின் ஆயத்தப்பணிகளை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இடைப்பாடி மக்களின் வேண்டுகோள்: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பி.டி.கே. வளாகத்தில் மக்கள் சபை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-நேற்று (நேற்று முன்தினம்) முதல்வர் பழனிசாமி தொகுதியான இடைப்பாடி தொகுதிக்கு சென்றேன். அங்குள்ள மக்கள், நீங்கள் ஊழல் எடப்பாடி பழனிசாமி என்று சொல்லி எங்கள் ஊருக்கு களங்கம் விளைவிக்கிறீர்கள். இதனால் நீங்கள் எடப்பாடி என்று சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். இதனால், நான் இனி முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று சொல்வதற்கு பதிலாக முதல்வர் பழனிசாமி என்றுதான் சொல்லுவேன்.

தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் விராலிமலை முருகன் கோயிலுக்கு தேர் இயக்கப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில்தான் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. ஆனால் விராலிமலையில் உள்ள சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்து வருகிறார். சிறப்பாக அவர் எதுவும் செய்யவில்லை. இந்த பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை வேறு யார் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். குட்கா புகழ் என்று அவருக்கு நான் பட்டம் கொடுத்து இருக்கிறேன். இந்த தொகுதிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார். ஜெயலலிதா மறைவின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பல திட்டங்கள் செயல்படுத்தினாலும் ஜெயலலிதா மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : visit ,Edappadi Palanisamy ,Delhi ,speech ,Tamil Nadu ,Sasikala ,meeting ,MK Stalin , Tamil Nadu, Sasikala, Edappadi Palanisamy, MK Stalin, Speech
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...