பூந்தமல்லி நகரமைப்பு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை: சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சி நகரமைப்பு அலுவலராக பணியாற்றி வருபவர் லட்சுமி நாராயணன் (45). இவர், ஆவடி அடுத்த திருநின்றவூர், பிரகாஷ் நகர், மெயின் ரோட்டில் வசிக்கிறார்.  கடந்த 2014ம் ஆண்டு லட்சுமி நாராயணன், திருவள்ளூர் நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக பணியாற்றியுள்ளார். அப்போது, அங்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அவர் மீது லஞ்ச ஒழிப்புதுறைக்கு அடிக்கடி புகார்கள் சென்றன. இதுதொடர்பாக, அவர் மீது வழக்கும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கலைச்செல்வன், நகரமைப்பு அலுவலர் லட்சுமிநாராயணன் வீட்டை சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டில் லட்சுமி நாராயணன் இல்லை என கூறப்படுகிறது.

பின்னர், அதிகாரிகள் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இருந்த முக்கிய ஆவணங்கள் சிலவற்றை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் நகரமைப்பு அலுவலர் லட்சுமி நாராயணனை விசாரணைக்கு வந்து ஆஜராக உத்தரவிட்டு சென்றுள்ளனர்.

Related Stories: