சசிகலா விடுதலையாவதால் கட்டுமான பணிகள் முடியாத நிலையில் ஜெயலலிதா நினைவிடம் 27ம் தேதி அவசர, அவசரமாக திறப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க 50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை கடந்த 2018 மே 7ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் அமைக்க மேலும் 12 கோடியும், நினைவிடத்தின் 5 ஆண்டு பராமரிப்பு பணிக்கு 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.  இந்த அருங்காட்சியகம், அறிவுசார் மையம் முழுக்க, முழுக்க ஏசி வசதி செய்யப்படுகிறது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்பணிகளை பிப்ரவரி முதல் வாரத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை வரும் ஜனவரி 27ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை ஜனவரி 27ம் தேதி காலை 11 மணியளவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையேற்று திறந்து வைக்க உள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள்,  சட்டப்பேரவை துணைத்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரும் 27ம் தேதி ஜெயலலிதா சமாதியை முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து 10 நாட்கள் கழித்து அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வரும் 27ம் தேதி ஜெயலலிதா தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலையாவதால், ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணி முடிவடையாத நிலையில், அவசர, அவசரமாக தமிழக அரசு திறக்க முடிவு செய்து இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: