லாட்டரி வியாபாரியை தேடி வந்த அதிர்ஷ்டம்: விற்காத கிறிஸ்துமஸ் பம்பருக்கு 12 கோடி பரிசு: தென்காசியை சேர்ந்தவர்

திருவனந்தபுரம்: கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரியில் முதல் பரிசான 12 கோடி ரூபாய் தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்ற லாட்டரி விற்பனையாளருக்கு கிடைத்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் பரிசு 12 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் குலுக்கல் கடந்த 17ம் தேதி திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆரியா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

இதில் முதல் பரிசு 12 கோடி ‘எக்ஸ்ஜி 358753’ என்ற எண்ணுள்ள டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. இந்த டிக்கெட் தமிழக எல்லையான ஆரியங்காவில், தென்காசியை சேர்ந்த வெங்கடேஷ் நடத்திவரும் லாட்டரி கடையில் விற்பனைக்கு வந்ததாகும். நேற்று மதியம் வரை டிக்கெட் வாங்கியது யார் என்று தேடி வந்தனர். இந்நிலையில் இந்த டிக்கெட்டை வாங்கியது தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்று தெரிய வந்தது. இவர் மோட்டார் பைக்கில் லாட்டரி விற்பனை செய்து வருகிறார்.

வெங்கடேஷிடம் லாட்டரி டிக்கெட் வாங்கி ஆரியங்காவு முதல் புனலூர் வரை விற்பனை செய்துவருகிறார். இந்த நிலையில் இவரிடம் விற்காமல் இருந்த ஒரு லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசான 12 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. லாட்டரியை நேற்று ஷரபுதீன் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறை  அலுவலகத்தில் அதன் இயக்குனர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். ஏஜென்ட் கமிஷன் மற்றும் வரி  நீங்கலாக 7.56 கோடி ஷரபுதீனுக்கு கிடைக்கும். வளைகுடா நாட்டில் பணி புரிந்து வந்த ஷரபுதீன் சில வருடங்களுக்கு முன் ஊருக்கு திரும்பி லாட்டரி விற்பனை செய்து வந்தார். இவருக்கு சபீனா என்ற மனைவியும் பர்வேஸ் முஷாரப் என்ற மகனும் உள்ளனர்.

Related Stories: