சாலையோரத்தில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியது: 14 தொழிலாளர், குழந்தை பலியான பரிதாபம்: குஜராத்தில் கோர விபத்து

சூரத்: குஜராத்தில் சாலையோரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் 14 தொழிலாளர்கள், ஒரு மாத பெண் குழந்தை என 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோசாம்பா கிராமம். இந்த கிராமம் அருகே கட்டுமான பணி நடந்து வருகின்றது. இந்த பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். பணி முடித்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு சாலை ஓரத்தில் இருந்த நடைபாதையில் படுத்து உறங்கியதாக தெரிகிறது. அப்போது கிம்மில் இருந்து மாண்ட்வி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்த டிராக்டரில் லாரி மோதியது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது தாறுமாறாக ஏறி இறங்கியது.

இதில் அங்கு படுத்திருந்த 12 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்துவிட்டனர். விபத்தில் இறந்தவர்களில் 8 பேர் பெண்கள். 14 பேர் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.  19வயதான ஒருவர் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 2 லட்சம் நிவாரணம்

விபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50 ஆயிரம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார். மேலும் தனது டிவிட்டர் பதிவில் ”சூரத்தில் லாரி விபத்தில் தொழிலாளர்கள் இறந்ததது துரதிஷ்டவசமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2.லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Related Stories: