பொதுமக்கள் கண்முன் கேபிள் டிவி ஆபரேட்டர் சரமாரி வெட்டிக் கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்; எம்எல்ஏ வீட்டு அருகே பரபரப்பு

சென்னை: போரூர் அடுத்த மதனந்தபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி வீட்டின் அருகே கேபிள் டிவி ஆபரேட்டரை, நேற்று 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முகலிவாக்கம், குருசாமி நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம்(55). அதே பகுதியில் கேபிள் டிவி நடத்தி வந்தார். நேற்று தனது மகன் தானேஷ்வரனுடன் இணைந்து, கேபிள் டிவி வயர்கள் பழுது குறித்து ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்க்க, தனது பைக்கில் மதனந்தபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். மதனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி வீட்டின் அருகே பைக்கில் வந்தபோது ஆட்டோ மற்றும் மொபட்டில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பொன்னுரங்கத்தின் பைக்கை இடிப்பதுபோல்  வந்தனர்.

இதனால் அவர் பைக்கை ஓரமாக நிறுத்தினார். அப்போது ஆட்டோ மற்றும் மொபட்டில் இருந்து இறங்கிய அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால், கண்ணிமைக்கும் நேரத்தில் பொன்னுரங்கத்தை சரமாரியாக வெட்டியது. இதை தடுத்த அவரது மகன் தானேஷ்வரனுக்கும் கை மற்றும் காலில் வெட்டு விழுந்தது. மேலும் அவரை மர்ம கும்பல் தள்ளி விட்டு, பொன்னுரங்கத்தை சரமாரியாக தலையில் வெட்டியது. இதில் பலத்த வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த பொன்னுரங்கம் நின்று கொண்டிருந்த பைக்கின் மீது சாய்ந்தபடியே, தனது மகன் கண்ணெதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. பொதுமக்கள் இக்கொலை சம்பவத்தை கண்டு, செய்வது அறியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். தானேஷ்வரன் தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். தகவலறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தானேஷ்வரனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பொன்னுரங்கம் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் இயங்காததால், கொலையாளிகளின் அடையாளத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொன்னுரங்கத்தின் செல்போனுக்கு நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த செல்போன் நம்பர் குறித்து மாங்காடு போலீசில் பொன்னுரங்கம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணை மேற்கொள்வதற்குள், நேற்று அவரை மர்ம கும்பல் கொலை செய்துள்ளனர். நிலத்தகராறு காரணமாக கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>