நகைக்கடை ஊழியர்களிடம் போலீஸ் சீருடையில் ரூ.80 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்: தக்கலை அருகே பரபரப்பு சம்பவம்

நாகர்கோவில்: தக்கலை அருகே போலீஸ் சீருடையில் வந்த 4 பேர் நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.80 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை ஊழியர்கள் மூன்று பேர் நேற்று மதியம் சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகளுடன் காரில் நாகர்கோவில் வந்தனர். பின்னர் அந்த நகைகளை தக்கலை அழகிய மண்டபத்தில் வைத்து திருநெல்வேலியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் ஒருவருக்கும் பின்னர் நாகர்கோவிலை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு அதற்கான பணத்துடன் மீண்டும் கேரளா சென்று கொண்டு இருந்தனர்.

தக்கலை குமாரகோவில் சந்திப்பு அருகே காரில்  வந்து கொண்டிருந்தபோது போலீஸ் சீருடையில் இருந்த 4 பேர் இவர்கள் காரை வழிமறித்தனர். இதில் ஒருவர் இன்ஸ்பெக்டர் சீருடையிலும் மற்ற 3 பேர் சாதாரண போலீஸ் சீருடையிலும் இருந்தனர். உங்கள் காரில் ஹவாலா பணம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். இந்த சோதனையில் காரில் இருந்த ரூ.80 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஏற்கனவே தயாராக இருந்த காரில் ஏறி தக்கலை காவல் நிலையத்திற்கு வரும்படி கூறிவிட்டு சென்று விட்டனர்.  

இதையடுத்து காரில் இருந்த மூன்று பேரும் தக்கலை காவல் நிலையத்திற்கு சென்று பணம் கேட்டனர். ஆனால் அப்படி எந்த போலீசாரும் பணத்தை வாங்கவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், இவர்கள் நகை  சப்ளை செய்த நாகர்கோவில் மற்றும் நெல்லையை சேர்ந்த நகை கடை உரிமையாளர்களையும் பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Stories:

>