உ.பிக்கு ரூ.85 லட்சம், தங்க நகை கடத்த முயற்சி சென்னையைச் சேர்ந்த சுங்க அதிகாரி கைது

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையம் வழியாக உத்தர பிரதேசத்திற்கு பணம், நகைகளை  கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த சுங்கத் துறை அதிகாரியை மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த சில  நாட்களாக வருவாய் துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகளின் சோதனை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று இவர்ளின் சோதனையில் சென்னையை சேர்ந்த சுங்கத் துறை அதிகாரி மனைவியுடன் சிக்கி கொண்டார்.

சென்னையில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தியபோது, இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் சூட்கேஸ், பையை சோதனை செய்ய திட்டமிட்ட அதிகாரிகள் அவர்களை தனியாக அமர வைத்தனர்.  அப்போது மனைவி சிறுநீர் கழித்து வருவதாக கழிவறைக்கு சென்று விட்டார். இதனால், கணவரை அழைத்து முதலில் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த சூட்கேஸ், பையில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள், தங்க நகைகள் இருந்தன. ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

விசாரணையில், அவர் சென்னையை சேர்ந்த சுங்கத் துறை அதிகாரி முகமது இர்பான் அகமது என்று தெரிய வந்தது. மனைவியுடன் சென்னையில் இருந்து விமான மூலம் பெங்களூரு வந்துள்ளார். இங்கிருந்து உத்தர பிரதேச மாநிலம், லக்னோவிற்கு செல்ல முயற்சித்தார். வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த பணம், நகைகளை லக்னோவிற்கு கடத்த அவர் முயன்றதாக கருதப்படுகிறது. அவரிடம் இருந்து ரூ.85.81 லட்சம் ரொக்கப் பணம், தங்க நகைகள், 2 லேப்டாப், 2 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல்  செய்து கைது செய்தனர்.

* கழிவறையில் பதுங்கிய மனைவி

முகமது இர்பானை தொழிற் பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது, கழிவறைக்கு சென்ற அவருடைய மனைவி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், அவரை சோதனை செய்ய காத்திருந்த தொழிற் பாதுகாப்பு படை பெண் அதிகாரிகள், அவரை தேடி உள்ளே சென்றனர். அப்போது அவர் கழிவறையில் ரூ.10 லட்சம் ரொக்கப் பணத்தை வீசியிருப்பது தெரியவந்தது. அதை கைப்பற்றிய அதிகாரிகள், அவரையும் கைது செய்தனர்.

Related Stories: