மத்திய அமைச்சர் அறிவிப்பு நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படாது

புதுடெல்லி: ‘2021ம் ஆண்டுக்கான நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படாது’ என மத்திய கல்வி துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 8 மாதங்கள் தாமதமாக தற்போதுதான் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படுகின்றன. இதுவரை ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும், மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்க, பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழக அரசு 40 சதவீதத்தை குறைத்துள்ளது.

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்கி ஜூன் 10ம் தேதி வரையிலும், செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆனாலும் விரிவான தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை. நாடு முழுவதும் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டாலும், மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறப்பு குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள், பெற்றோருடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெபினாரில் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சி அமைச்சரின் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, பொதுத்தேர்வு பாடத்திட்டம் தொடர்பாக மாணவர்கள் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பொக்ரியால் பேசுகையில், ‘‘சிபிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பொதுத்தேர்வுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலேயே நடத்தப்படும். மாணவர்கள் அதைப் படித்து தேர்வுக்கு தயாரானால் போதுமானது. ஆனால், நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படாது. முழுமையான பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் விரைவில் திறக்கப்படும். அதே நேரம், ஆன்லைன் வகுப்புகள் தொடரும்’’ என்றார். கொரோனா பாதிப்பிலும் நீட், ஜேஇஇ தேர்வுக்கு மாணவர்கள் முழு பாடத்திட்டத்தையும் படிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

* 90ல் 75 கேள்விக்கு விடை அளித்தால் போதும்  

நுழைவுத்தேர்வுகளில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாவிட்டாலும், விடை அளிப்பதில் மாணவர்களுக்கு இம்முறை சலுகை வழங்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகள் என 90 கேள்விகள் கேட்கப்படும். இதில் 75 கேள்விகளுக்கு (3 பாடத்திலும் தலா 25) விடை அளித்தால் போதுமானது. கடந்த ஆண்டு 3 பாடத்திலும் தலா 25 கேள்விகள் என 75 கேள்விகள் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>