அமெரிக்காவின் 46வது அதிபராக இன்று பதவியேற்கிறார் ஜோ பிடென்

* துணை அதிபராகிறார் கமலா ஹாரிஸ் பாதுகாப்பில் வாஷிங்டன்

* வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுகிறார் டிரம்ப்

* இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு விழா தொடங்கும்

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் இன்று பதவியேற்க உள்ளார். அவருடன் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார். ஆயுதம் ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், கொரோனா பீதிக்கு மத்தியில் நடக்கும் இப்பதவியேற்பு விழாவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்தது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடென் வெற்றி பெற்றார். அதிகாரத் தோரணையில் இனவெறியைத் தூண்டி, பாதகமான பல முடிவுகளை எடுத்த குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப்புக்கு அமெரிக்கர்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டினர். மக்கள் தீர்ப்பை ஏற்காத டிரம்ப் நீதிமன்ற படியேறியும் எதுவும் நடக்கவில்லை. இறுதியில் ஜோ பிடெனின் வெற்றி உறுதியானது.   

கடந்த 6ம் தேதி நாடாளுமன்றத்தில் பிடெனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களை தூண்டி விட்ட டிரம்ப் மிகப்பெரிய கலவரத்திற்கு காரணகர்த்தாவாகி விட்டார். டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளேயே ஆயுதங்களுடன் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது உலக நாடுகளின் கண்டனத்திற்குள்ளானது. இத்துடன் அடங்கிப் போன டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். இந்நிலையில், அமெரிக்காவின் 59வது பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடக்க உள்ளது. இதில், உலக வல்லரசின் 46வது அதிபராக ஜோ பிடென் பதவியேற்க உள்ளார்.

அவரோடு, அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், முதல் இந்திய வம்சாவளி, கறுப்பினத்தவர், தெற்காசியாவை சேர்ந்தவர் என பல பெருமைகளுடன் கமலா ஹாரிசும் பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தலைநகர் வாஷிங்டனின் கேபிடாலில் உள்ள நாடாளுமன்ற வெளிவளாகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இம்முறை குறைவான அழைப்பாளர்களே பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இருக்கைகள் சமூக இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வெளிவளாகத்தில் சிறு சிறு அமெரிக்க தேசியக் கொடியை வைத்தே  பிரமாண்ட தேசிய கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போல, ஆபிரகாம் லிங்கன் நினைவிடம் அமைந்துள்ள தேசிய வளாகம் முழுக்க அமெரிக்க கொடியுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்ச்சி அமெரிக்க உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ‘இளம் அமெரிக்கர்கள்’ என்ற கலைநிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. இதில், பிடெனின் மனைவி ஜில் பிடென், கமலா ஹாரிசின் கணவர் ஆகியோரின் உரைகள் இடம் பெறுகின்றன. அதைத் தொடர்ந்து, வரவேற்பு உரை, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. லேடி காகா தேசிய கீதம் பாடுகிறார். அதைத் தொடர்ந்து ஜெனிபர் லோபசின் துள்ளல் இசை நிகழ்ச்சி நடக்கும். பிற்பகல் சுமார் 12 மணி அளவில் பிடென் 46வது அதிபராக பதவியேற்பார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அவரைத் தொடர்ந்து துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

பின்னர் அதிபரும், துணை அதிபரும் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த படை வீரர்கள் அமைந்துள்ள அர்லிங்டன் தேசிய கல்லறைக்கு சென்று வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். மாலை 3 மணி அளவில், பிடென், ஜில் பிடென் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அத்துடன், புதிய அதிபராக பிடென் வெள்ளை மாளிகையில் குடியேறுவார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என டிரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனாலும் முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பிடென் அதிபராக முடிசூடும் முன்பாக, காலையிலேயே வெள்ளைமாளிகையை டிரம்ப் காலி செய்கிறார். அவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான புளோரிடாவுக்கு செல்ல உள்ளார்.

* பதவியேற்றதும், அமெரிக்காவை சீரமைப்பதற்கு நிறைய பணிகள் இருக்கிறது. அது எளிதாக இருக்க போவதில்லை என கமலா ஹாரிஸ் கூறி உள்ளார்.

* பதவியேற்பு விழாவின் மைய கருத்தாக ‘ஒன்றுபட்ட அமெரிக்கா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், ஒன்றுபட்ட அமெரிக்காவின் அவசியத்தை வலியுறுத்தி பதவியேற்பு விழாவில் பிடென் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

* ஆர்ப்பாட்டக்காரர்களை

கண்டதும் சுட உத்தரவு   

டிரம்ப் ஆதரவாளர்கள் பதவியேற்பு தினத்தன்றும் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்துவார்கள் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால், வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே வாஷிங்டனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் யாரும் பொது இடத்தில் கூட தடை உள்ளது. நாடாளுமன்றத்தை சுற்றி 7 அடி உயர வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 7 அடுக்கு பாதுகாப்புடன் 7000 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் முழுவதும் 25,000 வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆர்பாட்டக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* பாரம்பரியத்தை உடைத்த டிரம்ப்  

அமெரிக்க வரலாற்றில் இதுவரை பதவி மாற்றம் சுமூகமாகவே நடந்துள்ளது. பதவி மாற்றத்திற்கென பாரம்பரிய பழக்கமும் உள்ளது. பதவியேற்பு அன்று காலை வெளியேறும் அதிபர், புதிய அதிபரை வரவேற்பார். புதிய அதிபர் அவரது மனைவி ஆகியோர் வெளியேறும் அதிபர் குடும்பத்துடன் அமர்ந்து காலை உணவு சாப்பிடுவர். இரு குடும்பமும் இணைந்து பதவியேற்பு நடக்கும் நாடாளுமன்றத்திற்கு இணைந்து செல்வார்கள். இது சுமூகமான பதவி மாற்றத்தின் அடையாளமாக இருந்தது. இந்த கண்ணியத்தை ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி தலைவர்கள் காப்பாற்றி வந்தனர். முதல் முறையாக டிரம்ப் கண்ணியம் மீறி உள்ளார்.

Related Stories: