சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 27ம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா. இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று (19ம் தேதி) காலை 6.45 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பாக எழுந்தருளினார்.

தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 7 மணியளவில் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. தினமும் அம்மன் சிறப்பு அலங்கரத்தில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருகிறார். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பத்திருவிழா வரும் 27ம் தேதி இரவு நடைபெறுகிறது. 28ம் தேதி காலை அம்மன் தைப்பூசத்திற்காக பல்லக்கில் புறப்பட்டு வழி நடை உபயங்கள் பெற்று நொச்சியம் வழியாக வட திருக்காவேரி சென்றடையும் சிறப்பு பெற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் அண்ணன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் தங்கை சமயபுரம் அம்மன் சீர் பெறும் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories:

>