நாகர்கோவிலில் மாநகராட்சி பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி: அச்சத்தை போக்க விழிப்புணர்வு பிரசாரம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மாநகராட்சி பணியாளர்கள் இன்று தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் போடும் பணி கடந்த 16ம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் செண்பகராமன்புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் தடுப்பூசிக்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடையே ஆர்வம் குறைவாக உள்ளது. முதல் நாள் 55 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 2 வது நாள் 44 மட்டுமே தடுப்பூசி போட்டனர். நேற்று சற்று அதிகபட்மாக மொத்தம் 141 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் 86 பேரும், குழித்துறை அரசு மருத்துவமனையில் 18 பேரும், செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 23 பேரும், பத்மநாபபுரத்தில் 14 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 240 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இன்று 4 வது நாள் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

கடந்த 3 நாட்களை விட இன்று அதிகளவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள, மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகர்கோவிலில் மாநகராட்சி பணியாளர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்படுகிறது. முதற்கட்டமாக இன்று 300 பேர் தடுப்பூசி போட பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் காலை முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது. பெயர்கள் பதிவு செய்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால், பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என  மருத்துவர்கள் கூறினர். தடுப்பூசி  தொடர்பாக அச்சத்தை போக்க, சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி போட்டுக் ெகாண்ட யாருக்கும் பக்க விளைவுகள் இல்லை.

Related Stories:

>