கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகள் விடுதலை..!!

திண்டுக்கல்: ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட 7 மாவோயிஸ்டுகளை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள புல்லாவெளி வனப்பகுதியில் 2008ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகவும், அங்கு அவர்கள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது. இதில் மாவோயிஸ்டு நவீன் பிரசாத் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிழந்துள்ளார். பயிற்சியில் ஈடுபட்டு மற்ற 7 மாவோயிஸ்ட்கள் தப்பி ஓடினர்.

தப்பியோடியவர்களில் ரஞ்சித், நீலமேகம், கண்ணன், பகத்சிங், ரீனாஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, காளிதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொடைக்கானல் போலீஸார் இந்திய வெடிமருந்து சட்டம், இந்திய ஆயுதங்கள் சட்டம், சட்டவிரோத தடுப்புசட்டம் உள்ளிட்ட 18 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் மீதான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜமுனா இன்று தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் 7 பேரும் விடுதலை செய்வதாக அவர் தீர்ப்பளித்துள்ளார்.

Related Stories: