திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம்தேதி ரதசப்தமி உற்சவம் : ஒரே நாளில் 7 ரதங்களில் சுவாமி உலா

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் ரதசப்தமி உற்சவத்தில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தலைமை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ரதசப்தமி ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயல் அலுவலர் ஜவகர் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:

கி.பி.1564 முதல் ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சவம் நடக்கிறது. மலையப்ப சுவாமி தாயார்களுடன் ஒரேநாளில் 7 பெரிய வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இது மினி பிரமோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 19ம்தேதி அதிகாலை சூரியபிரபை வாகனத்தில் தொடங்கி இரவு சந்திரபிரபை வாகனத்துடன் நிறைவு பெறுகிறது. இந்த ரதசப்தமி உற்சவத்தை காண தரிசன டிக்கெட்டுகள் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.மதியம் 3 மணிக்கு நடைபெறக்கூடிய சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கொரோனா காரணமாக பக்தர்களின்றி கோயில் தெப்பக்குளத்தில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

₹300 டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், மாதந்தோறும் ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 1ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான ₹300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதில், நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படும். மேலும், அதேநாளில் திருமலையில் உள்ள அறைகளும் முன்பதிவு செய்து கொள்ளலாம். தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை ‘http//tirupathibalaji.ap.gov.in’ என்ற தேவஸ்தான இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: