மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஜன.27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினாவில் ஜன.27- ம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் திறந்துவைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.80 கோடி மதிப்பில், ஃபீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு, பிரதமர் மோடி வர வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி சென்ற முதல்வர் அதற்கான கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா நினைவிடத்தை வரும் ஜன.27ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் ஜெயலலிதா நினைவு திறப்பு விழா நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்தலைவர், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நடக்கும் அதே நாளில், சசிகலாவும் சிறையில் இருந்து விடுதலையாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>