×

திமுக தலைமையில்தான் புதுவையில் கூட்டணி : ஜெகத்ரட்சகன் எம்பி திட்டவட்டம்

புதுச்சேரி: புதுவையில் வரும் தேர்தலில் திமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என ஜெகத்ரட்சகன் எம்பி திட்டவட்டமாக கூறினார்.புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுகவில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்பி தலைமையில் நேற்று புதுவையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ வரவேற்றார். வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான ஜெகத்ரட்சகன் பேசியதாவது: புதுச்சேரிக்கு சென்று தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து வாருங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டார். தொண்டர்களின் உணர்வுகளை கேட்டேன். திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் சொல்ல உள்ளேன். எந்த இயக்கத்தோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்பதை அவர்தான் முடிவு செய்வார்.

புதுச்சேரியை சொர்க்கமாக்கலாம். இந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்தவன் நான், இந்த மண்ணை நேசிப்பவன் நான், பாவிகள் புதுச்சேரியை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்ன செய்ய முடியாது, ஏன் செய்ய முடியாது? இத்தனை தொழிற்சாலைகள் மூடி கிடக்கின்றன. இதனால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. புதுச்சேரிக்கு வருவாய் வருவதற்கு என்ன திட்டம் தீட்டியுள்ளீர்கள். நான் திட்டம் வைத்துள்ளேன்.

புதுச்சேரி மக்கள் நன்றாக இருக்க வேண்டும். வேலையில்லா நிலையே வரக்கூடாது. புதுச்சேரி சிறிய ஊர். எனது தொகுதியில் 16 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. இங்கு 9.5 லட்சம் ஓட்டுகள் தானே உள்ளன. 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுகின்றேன் என்றால் தொகுதியில் உள்ள அனைவரது வீட்டிற்கும் நான் பிள்ளையாக உள்ளேன். விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. மாற்று வழி என்ன இருக்கிறது. தொழிற்சாலைகளை கொண்டு வந்து ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுப்பது பெரிய விஷயமே இல்லை. அம்பானி, டாடா என 10 பேரை சந்திக்க வேண்டும். புதுச்சேரி மக்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றால் அவர்கள் காலில் விழுங்கள்.

புதுச்சேரி துறைமுகத்தில் வளர்ச்சி ஏற்படுத்தினால் எவ்வளவு தொழிற்சாலைகள் வரும். புதுச்சேரி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்கினால் பிரான்சில் இருந்து நமது சொந்தங்கள் வந்து செல்வார்கள். நான் உங்கள் வீட்டு பிள்ளையாக இருப்பேன். புதுச்சேரியை உலகில் உள்ளவர்கள் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் மாற்றுவேன். வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே அமையும். நாளை நமதே என்று இருங்கள். 30 தொகுதியும் வெற்றி பெற்று தந்தால்தான் நான் இங்கே வருவேன். இல்லையென்றால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : DMK ,alliance ,Jegathratsagan MP , ஜெகத்ரட்சகன்
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்