அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க 100% வாய்ப்பு இல்லை : டெல்லியில் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்த பின் முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை:சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று டெல்லியில் பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். இதையடுத்து இன்று மதியம் டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டம் செயல்பட குடிமராமத்து பணிகள் மூலம் ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளது. நிவர், புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. அவற்றுக்கும் நிவாரணம் வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

ஏழை, எளிய மக்களுக்கு வசிக்கும் இடத்தில் சிகிச்சை அளிக்க 2,000 அம்மா கிளினிக் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்றைய தினம் 331 பேர் மருத்துவ படிப்பிலும், 91 பேர் பல் மருத்துவ கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். மேலும் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு 450 பேர் சேர வாய்ப்புள்ளது. தேசிய அளவில் சாலை விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது. நல்ல சாலைகள் உருவாக்கப்பட்டதே இதற்கு காரணம். மற்ற மாநிலத்துக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. பிரதமரை சந்திக்கும்போது அரசியல் பேசவில்லை.

நிவர், புரவி, காவிரி - குண்டாறு திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். நான் வந்தது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக நிதி கேட்கவே டெல்லி வந்துள்ளேன். அரசியல் பற்றி பேசவில்லை. தேர்தல் வர அதிக காலம் உள்ளது. கருத்து கணிப்புகளை சிலர் வெளியிட்டுள்ளனர். மீண்டும் தாமரை மலரும் என்றும் சொல்வது தவறு இல்லை. ஒவ்வொரு கட்சியும், தங்கள்கட்சி வளர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். சாதாரண கட்சியே பேசும்போது, அகில இந்திய கட்சி பேசுவது தவறு இல்லை. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு.

தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சசிகலா விடுதலையால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது. சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை. அவர் அதிமுக கட்சியிலே இல்லை. சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என்றுதான் 100 சதவீதம் பேசினோம். அதேபோன்று 100 சதவீதம் சசிகலா அதிமுகவில் சேர வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: