ஊழல் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கோரி வழக்கு...! சட்ட திருத்தம் செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைத்துள்ளது. சட்டத்திருத்தம் கொண்டுவர நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அமைப்பிடம் மனு அளித்து நிவாரணம் பெற மனுதாருக்கு உத்தவிடப்பட்டுள்ளது. திருச்சி லால்குடியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில், இந்தியாவில் உள்ள மக்கள் பல்வேறு வகையான வரிகளை அரசுக்குச் செலுத்தி வருகின்றனர். ஆனால் இப்படி மக்கள் கொடுக்கு பணத்தை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றனர்.

கிட்டத்தட்ட எல்லா அரசுத் துறைகளிலும் பல்வேறு வகையான ஊழல்கள் நடக்கிறது. குறிப்பாக வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்துத்துறை, வணிகத்துறை மற்றும் கல்வித் துறை ஆகியவற்றில் மிக பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்று வருகிறது. ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு அதிகபட்சம் 7 வருட சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு அதிகாரிகள் எவ்வித பயமுமின்றி ஊழல் செய்து வருகின்றனர். ஊழல் தடுப்பது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு பயனில்லை. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும்.

ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை, வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் அவர்களின் சொத்துக்கள், நகைகள், வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ல் திருத்தம் செய்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மதுரை கிளை நிர்வாக நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது; சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட அரசிடம் மனு அளித்து மனுதாரர் நிவாரணம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories:

>