ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீரில் மாடுகளை குளிப்பாட்டும் அவலம்-நிரந்தர தீர்வுகாண பொதுமக்கள் கோரிக்கை

பேராவூரணி : பேராவூரணியில் நீலகண்டபுரம் செல்லும் வழியில் எல்.சி.எண்-121 ஆளில்லா ரயில்வேகேட் இருந்தது. 2012ம் ஆண்டு காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது, நீலகண்டன் 2வது தெரு செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டும், ஆளில்லா ரயில்வே கேட்டும் குறைந்த தூர அளவில் இருந்ததால் ஆளில்லாத ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது.

இதனால் பாதிக்கப்படும் அந்த வழியை பயன்படுத்தி வந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் இப்பகுதியில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள், ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடினால் போக்குவரத்து மற்றும் தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் நிரந்தரமாக மூடக்கூடாது என பல கட்டப் போராட்டங்களை நடத்தினர்.

மேலும், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தென்னக ரயில்வே அதிகாரிகள் என பலரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.இதை தொடர்ந்து ரயில்வே கேட் அகற்றும் இடத்தில் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த பணி ஆமைவேகத்தில் நடைபெற்று முழுமையடையாமல் உள்ள நிலையில், தொடர் மழையால் பாலத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.

இதனால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்று மூன்று நாட்களை கடந்த நிலையிலும் மோட்டார் வைத்து தண்ணீரை தொடர்ந்து இறைத்தும் பாலத்தின் கீழ் ஆறுபோல் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாடுகளை கொண்டுவந்து ஆறு, குளங்களில் குளிப்பாட்டி செல்வதைபோல் குளிப்பாட்டி செல்கின்றனர்.எனவே இது போன்ற பிரச்னைக்குரிய இடங்களை ரயில்வே நிர்வாகம் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: