கடமலை-மயிலை ஒன்றியத்தில் கனமழை பெய்தும் நிரம்பாத கண்மாய்கள்

ஆக்கிரமிப்புகளால் அவலம்; மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பால், கனமழை பெய்தாலும் மழைநீர் தேங்குவதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் முருங்கை, மா, தென்னை, கொட்டைமுந்திரி ஆகியவை பலநூறு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால், சாகுபடி பாதிக்கப்படுகிறது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாகுபடி காப்பாற்றப்பட்டு வருகிறது.

விவசாயிகளும் உழவடைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேகமலை, வெள்ளிமலை, அரசரடி, வட்டக்கானல், ஓயாம்பாறை, பிளவக்கல் மலைப்பகுதி ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர், சிறு, சிறு ஆறுகள், நீர்வரத்து ஓடைகள் மூலம் மூலவைகை ஆறு வழியாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்குச் செல்கிறது.

இந்நிலையில், ஒன்றியத்தில் வருசநாடு பஞ்சம்தாங்கி, சாந்தநேரி, செங்குளம், பெரியகுளம், கடமான்குளம், கோவிலாங்குளம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவைகளின் நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்திருப்பதாலும், கண்மாய்களிலும் ஆக்கிரமித்திருப்பதாலும் கனமழை பெய்தாலும், கண்மாய்கள் நிரம்புவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, ஒன்றியத்தில் உள்ள நீர்வரத்து ஓடைகள், ஆறுகள், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை காலங்களில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் அங்குச்சாமி கூறுகையில், ‘இந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி வைகை ஆற்று நீரை தேக்கினாலே ஒன்றியத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: