அடிக்கல் நாயகனாக மட்டுமே உள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.. பணிகள் ஏதும் நடைபெறவில்லை : கனிமொழி தாக்கு

நாகர்கோவில்: விளம்பரத்திற்காக கோடி கோடியாக பணத்தை செலவழிக்கும் ஆட்சியாளர்கள் மழையால் பாதித்த விவசாயிகளின் அழுகுரலை கேட்க தயாராக இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பரப்புரையின் 3ம் கட்ட பிரசார பயணம் குமரியில் தொடங்கியது. தொடர்ந்து நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி.,ஆட்சியாளர்கள் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறினார். முதல்வர் பழனிசாமி வெறும் அடிக்கல் நாயகனாக மட்டுமே உள்ளதாக அவர் சாடினார். அதிமுகவால் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டு உள்ளதாகவும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், மத்தியில் உள்ள ஆட்சி விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்களை கொண்டு வந்துள்ளது. கார்பரேட்களிடம் விவசாயிகளை அடகு வைக்கும் சட்டங்கள் அவை. ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருள் இனி கிடைக்காது என்ற நிலையை உருவாக்கும் சூழல், உணவு பாதுகாப்பு பட்டியலில் உள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்துவிட்டார்கள். காஸ் விலையை ரூ.100 விலை உயர்த்துகிறார்கள். அதனை எதிர்த்து கேள்வி கேட்க இங்கிருப்பவர்களுக்கு தைரியம் இல்லை.தமிழ் மக்களுக்கு, சுயமரியாதைக்கு துரோகம் செய்துகொண்டு இருக்கும் ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு மறுபடியும் தலைவர் கலைஞர் ஆட்சி, உங்களுக்காக பணியாற்றும் தளபதி ஆட்சியை உருவாக்கி காட்டுவோம். மறுபடியும் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வோம்,இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: