கொத்தவால்சாவடியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை: தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: கொத்தவால்சாவடி நாட்டு பிள்ளையார் கோயில் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. இதில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.  இதையடுத்து, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே நாராயணப்பன் தெருவில் சாலையோரத்தில் வசிக்கும் 300 குடும்பத்தினருக்கு பொங்கல் மற்றும் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு புத்தாடை, சுயதொழில் செய்வதற்காக 3 பேருக்கு தள்ளுவண்டி மற்றும் நலத்திட்ட உதவிகளை தயாநிதி மாறன் எம்பி வழங்கினார். இதில், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, மாநகராட்சி அதிகாரிகள், உணவு வழங்கல் அதிகாரிகள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் தயாநிதி மாறன் எம்பி ேபசியதாவது, “கொரோனா தடுப்பு ஊசி விஷயம் மக்களின் உயிர் சார்ந்தது என்பதால், மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மக்களின் உயிரோடு விளையாடி விடக்கூடாது. இதுவரை முதல்வர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட போதெல்லாம் என்ன பயன் தமிழகத்திற்கு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள பாஜ தலைவர்களின் காலில் விழுவதற்காகவே பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.   மாற்றத்தை ஏற்படுத்த திமுகவால் மட்டுமே முடியும் என்பதால் ரஜினி மக்கள் மன்றத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் திமுகவில் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்” என்றார்.

Related Stories: