டிவியில் சமஸ்கிருத செய்திக்கு எதிரான மனு முடித்து வைப்பு

மதுரை: டிவியில் சமஸ்கிருத செய்திக்கு எதிரான மனு முடித்து வைக்கப்பட்டது. மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த வக்கீல் முத்துகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் செயல்படும் பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிடத்திற்கு சமஸ்கிருத செய்தியை ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருத மொழியை திணிக்கும் வகையில் இச்செயல் உள்ளது. தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவதை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து ஒரே மாதிரியாக நிதி ஒதுக்கிட உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், ‘‘இதைவிட பல முக்கிய பிரச்னைகள் உள்ளன. மனுதாரருக்கு தேவையில்லை எனில், தொலைக்காட்சியை நிறுத்தி விடவோ, வேறு சேனலுக்கு மாற்றிவிடவோ செய்யலாம். தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து உரிய நிவாரணம் தேடிக்கொள்ளலாம்’’ எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories:

>