6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை: புதுக்கோட்டை கோர்ட் தீர்ப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த துவார் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்(52). நரியன்புதுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ஞானசேகரன்(50) தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.  பள்ளி மாணவிகள் 6 பேருக்கு ஆசிரியர் அன்பரசன் கடந்த 2018ல் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இவர் மீது தலைமை ஆசிரியர் ஞானசேகரன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அன்பரசன் மற்றும் ஞானசேகரன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  இந்த வழக்கை புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா விசாரித்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அன்பரசனுக்கு 3 பிரிவுகளில் 49 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.45ஆயிரம் அபராதமும், தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.  மேலும், பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: