×

புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: வேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி ஆவேசம்: 10வது முறையாக மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்

புதுச்சேரி: புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. சபாநாயகர் சிவக்கொழுந்து கேட்டுக்கொண்டதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டிந்த அமைச்சர் கந்தசாமி சபை நிகழ்வில் கலந்து கொண்டார்.  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைநிலை ஆளுநர் சந்திரவதி, முன்னாள் அமைச்சர்கள் ஜோசப் மரியதாஸ், ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.ஏ.எஸ் சுப்பிரமணியம், அண்ணாமலை ரெட்டியார், சங்கர், பாலன், முன்னாள் எம்பி வசந்தகுமார், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  பின்னர் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என 10வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தாக்கல் செய்தார்.

அதையடுத்து முதல்வர் நாராயணசாமி பேசுகையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை தந்து கொள்ளை லாபம் அடிக்கவே இச்சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.  விவசாயிகளுக்கு உதவாத சட்ட நகலை, முதல்வர் என்றாலும், விவசாயத்தை காக்க வேண்டிய குடிமகன் என்ற அடிப்படையில் கிழிக்கிறேன் எனக்கூறி தன் கையில் வைத்திருந்த சட்டநகலை கிழித்தெறிந்தார்.  பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபைக்கு வராமல் புறக்கணித்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பாஜக நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் கூட்டம் துவங்கியபின் புறப்பட்டு சென்றனர். திமுக எம்எல்ஏக்கள் சிவா, கீதா ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோர் திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டதால் சட்டசபைக்கு வரவில்லை.


Tags : Narayanasamy ,Puducherry Assembly , Puducherry Assembly agitation: Chief Minister Narayanasamy furious over tearing up copy of agriculture law: Resolution seeking state status for the 10th time
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை