பயிர்களுக்கு நிவாரணம்கோரி விவசாயிகள் போராட்டம்: கரூர், தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

சென்னை: நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் கரூர், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். கரூர்  மாவட்டம் குளித்தலை உழவர் உற்பத்தியாளர் குழு, தேசிய தென்னிந்திய  நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், மழை நீரில் அழுகிய சம்பா நெற்பயிர்களுடன் கரூர் கலெக்டர்  அலுவலகத்திற்கு மனு கொடுக்க நேற்று வந்தனர்.  மனுவில், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தாலுகா  பகுதியில் பயிரிடப்பட்ட நெல், மரவள்ளி, உளுந்து,  சோளம், எள் போன்ற பயிர்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.  அவர்களை தடுத்த அதிகாரிகள் குறிப்பிட்ட சிலர் தான் உள்ளே செல்ல வேண்டும் என தெரிவித்தனர். முக்கிய பிரச்னை குறித்து பேசக்கூட  உள்ளே செல்ல அனுமதியில்லையா? என ஆத்திரமடைந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த டிஆர்ஓ  ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் சிவசுப்ரமணியன் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட  அனைத்து பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விவசாயிகள் வலியுறுத்தினர். விசாரணை நடத்தி உரிய  நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதையடுத்து விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். தூத்துக்குடி கலெக்டர்  அலுவலகத்தில் போராட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர்கள் கனமழையால் அழுகி சேதமானதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், சேதமான பயிர்களுடன் அணி அணியாக திரண்டு வந்து நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் கேட்டு கோஷங்களை எழுப்பினர்.

ஒரே நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே நுழைய முயன்றதால் போலீசார், கேட்டை மூடி தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் அழுகி பயிர்களை கேட்டின் முன்பாக போட்டு தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் தாலுகாவிற்கு 10 விவசாயிகள் வீதம் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் செந்தில்ராஜை  சந்தித்து, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.  விவசாயிகள் வாங்கியுள்ள பயிர் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய  வேண்டும் என  கூறியுள்ளனர்.

Related Stories: