×

தமிழகத்தில் பெட்ரோல் விலை 88ஐ எட்டியது: நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 88ஐ எட்டியது.   சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், கொரோனா பரவல் காரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1,375 ஆக வீழ்ச்சி அடைந்ததால், விலையில் மாற்றம் செய்யாமல் 2 மாதத்திற்கு அப்படியே வைத்துக் கொண்டனர். கச்சா எண்ணெய் விலை சரிவின் பலனை கலால் வரி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்திக் கொண்டன. ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்கவும், மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த தொடங்கி விட்டனர்.  இந்த வகையில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் அவ்வப்போது அதிகபட்சமாக 30 காசு வரை உயர்த்தியதால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உச்சத்தை நோக்கிச் சென்றது. மும்பை, ஜெய்பூர் நகரங்களில் பெட்ரோல் ஒரு லிட்டர் 92ஐ எட்டியது.

இதனால், பல்வேறு அரசியல் கட்சியினரும், வாகன ஓட்டிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யாமல் இருந்த எண்ணெய் நிறுவனங்கள், நடப்பு மாதம் கடந்த வாரத்தில் மீண்டும் விலையேற்றத்தை மேற்கொண்டது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று, நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 23 காசும், டீசல் 24 காசும் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல், ஒரு லிட்டர் 87.40க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று காலை 6 மணி முதல் 23 காசு அதிகரித்து 87.63 ஆக உயர்ந்தது. டீசல் ஒரு லிட்டர் 80.19ல் இருந்து 24 காசு அதிகரித்து 80.43 ஆக விற்கப்பட்டது. இதுவே தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் லிட்டர் 88ஐ எட்டியது. சேலத்தில் பெட்ரோல் நேற்று முன்தினம் விலையான 87.83ல் இருந்து 22 காசு அதிகரித்து 88.05 ஆகவும், டீசல் 80.63ல் இருந்து 24 காசு அதிகரித்து 80.87 ஆகவும் விற்பனையானது. இந்த விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். விலைவாசி உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பிற்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Motorists ,Tamil Nadu ,country , Petrol price hits 88 in Tamil Nadu: Continued rise across the country: Motorists suffer severely
× RELATED பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்