எல்லையில் 4.5 கி.மீ. ஊடுருவி புதிய கிராமம் உருவாக்கியது அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு

புதுடெல்லி: அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய எல்லையில் இருந்து 4.5 கி.மீ. தூரத்தில் 101 வீடுகளுடன் புதிய கிராமத்தை சீனா கட்டியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் லடாக் எல்லையில் அத்துமீறி ஊடுருவிய சீன வீரர்கள் இந்திய ராணுவத்தினர் 20 பேரை சுட்டுக் கொன்றனர். இந்தியா கொடுத்த பதிலடி தாக்குதலில் எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற விவரத்தை இதுவரை சீனா தெரிவிக்கவில்லை.  இந்நிலையில், அருணாச்சல் பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள சாரி சூ ஆற்றங்கரை அருகே 101 வீடுகளுடன் சீனா புதிய கிராமத்தை உருவாக்கி உள்ளது. இதனை பிளானட் லேப் நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. கடந்த 2019 ஆகஸ்டில் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்களில், இப்பகுதியில் கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் எடுத்த புகைப்படங்களில் இந்திய எல்லையில் இருந்து 4.5 கி.மீ தூரம் ஊடுருவி சீனா 101 வீடுகள் கட்டப்பட்டிருப்பதும், அதனையொட்டிய பகுதியில் சாலைகள் அமைத்து வருவதும் தெளிவாக தெரிகிறது.

இது தொடர்பாக கடந்தாண்டு அக்டோபரில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், “இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் இந்தியா உள்கட்டமைப்புகளை பலப்படுத்தி அதிகளவு ராணுவத்தினரை குவித்து வருகிறது. அதனால் தான் சீன அரசும் உள்கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது,” என்று கூறினார்.  ஆனால், அவர் கூறியது போல், இந்தியப் பகுதியில் எவ்விதமான உள்கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் உறுதியாகி உள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், “இந்திய எல்லைக்குள் சீனா சமீபத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருவதை இந்தியா கவனித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக சீனா உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,”என்று தெரிவித்துள்ளது.

Related Stories: